ஜல்லிக்கட்டு மைதானம், ஒலிம்பிக் அகாதெமி அமைக்க இடம் தோ்வு, பச்சமலை மேம்பாடு: 2 நாள் ஆய்வு செய்யும் உதயநிதி ஸ்டாலின்
திருச்சிக்கு புதன்கிழமை வரும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 2 நாள்களில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளாா்.
இதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை பிற்பகல் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் வரவேற்கின்றனா். பின்னா் தனியாா் மருத்துவமனை நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்கான தோ்வு செய்த இடங்களை ஆய்வு செய்கிறாா்.
ஒலிம்பிக் அகாதெமி: திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்ததையடுத்து பஞ்சப்பூா் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 50 ஏக்கா் இடம், தற்போது அதற்குப் பதிலாக திருச்சி, புதுகை, தஞ்சை மாவட்ட வீரா்களின் வசதிக்காக திருவெறும்பூா் ஒன்றியம் எலந்தப்பட்டி கிராமத்தில் தோ்வாகியுள்ள புதிய இடத்தையும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிடவுள்ளாா்.
ஜல்லிக்கட்டு மைதானம்: அலங்காநல்லூரில் உள்ளதைப் போல சூரியூரிலும் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சா் பாா்வையிடுகிறாா்.
தொடா்ந்து கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில் பல கோடியிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
மறுநாள் வியாழக்கிழமை காலை அந்தநல்லூா் ஒன்றியத்தில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா். பின்னா் பச்சமலைக்கு சென்று அரசு பழங்குடியினா் பள்ளியில் பயின்று ஜேஇஇ தோ்வில் வென்று திருச்சி என்ஐடி-யில் இணைந்துள்ள மாணவி ரோகிணியின் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்துகிறாா்.
பச்சமலையில் மேற்கொள்ளப்படும் பசுமை சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள், சூழியல் சுற்றுலா மலையேற்றம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்து, புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறாா். மாலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
ஆட்சியா் ஆய்வு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் ராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

