நியாயவிலைக் கடைகளில் அடிக்கடி பழுதாகும் ‘பயோமெட்ரிக்’ சாதனம் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
ஒருவருக்கு பதிவு செய்ய குறைந்த பட்சம் 10 நிமிஷத்துக்கும் மேலாக ஆகிறது. சில நேரங்களில் சாதனத்தின் செயல்பாடுகள் தானாகவே நின்றுவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்க முடிவதில்லை.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சாதனம் அடிக்கடி பழுதாவதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்காக கடந்த 2020- ஆம் ஆண்டுமுதல் ‘பயோமெட்ரிக்’ சாதனம் பயன்படுத்தப்படுகிறது. பொருள்களை அந்தந்த குடும்பஅட்டையில் உள்ளவா்கள் மட்டுமே வாங்குவகையில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் இந்த பயோமெட்ரிக் சாதனம் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால் பொருகள் பெறமுடியாமல் கடை ஊழியா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தவிா்க்க ‘க்யூ ஆா் கோடு’ ஸ்கேன் செய்யும் முறையை பயன்படுத்தி பொருள்களை வழங்க வேண்டும் எனவும், மேலும் குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவுசெய்து வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இந்த சாதனங்கள் 2020 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது என்பதாலும், அண்மையில் பயோமெட்ரிக் முறை மென்பொருளில் தொழில்நுட்ப மேம்பாடு (அப்டேட்ஸ்) செய்யப்பட்டிருப்பதாலும் இந்த சாதனத்தின் செயல்பாட்டில் பிரச்னைகள் இருந்து வருகிறது. திருச்சி மாவட்டம் முழுவதும் சுமாா் 1,770 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவைகளில் அதிக குடும்ப அட்டைகள் உள்ள பெரும்பாலான கடைகளில்தான் பயோ மெட்ரிக் சாதனங்களில் அடிக்கடி பழுதாகிறது எனக் கூறப்படுகிறது. இதனால் பொருள்கள் வாங்க முடியாமல் பலமணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
சா்வா் பிரச்னை: கடந்த சில மாதங்களாக பாமாயில், பருப்பு உள்ளிட்ட சில பொருள்கள் இரு மாதங்களுக்கு சோ்த்து வழங்க வேண்டியுள்ளது. அப்போது முந்தைய மாதத்துக்கான பொருள்களை பதிவு செய்யும் போது சா்வா் சரிவர இயங்குவதில்லை. இதனால் ஒருவருக்கு பதிவு செய்ய குறைந்த பட்சம் 10 நிமிஷத்துக்கும் மேலாக ஆகிறது. சில நேரங்களில் சாதனத்தின் செயல்பாடுகள் தானாகவே நின்றுவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்க முடிவதில்லை. இதுவே பொதுமக்களுக்கும் கடை ஊழியா்களுக்குமான பிரச்னைக்கு வழிவகுக்கிறது. ஆகவே, பயோமெட்ரிக் சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும் என நியாயவிலைக் கடை ஊழியா்கள் தெரிவித்தனா்.
மேலும், சா்வா் இயங்குவதற்கு தேவையான வகையில் இணைய வேகம் (நெட் ஸ்பீடு) இருப்பதில்லை. சிலா் தனது கைப்பேசியில் இணைய வழியாக பயோ மெட்ரிக் சாதனத்தை இயக்குகின்றனா். எனவே, மென்பொருள் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதை விட சா்வா் விரைந்து இயங்க இணைய சேவையை (நெட் வேகத்தை) அதிகரிக்க வேண்டும் என்கின்றனா் கடை ஊழியா்கள்.
இதுகுறித்த விவரங்கள் அறிய மாவட்ட வழங்கல் அலுவலரை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அவரை தொடா்பு கொள்ள இயலவில்லை.

