பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

திருச்சியில் இடி, மின்னலுடன் கனமழை: சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சியில் இடி, மின்னலுடன் கனமழை! சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

News image

திருச்சியில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையின்போது ஐயப்பன் கோயில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் முகப்பு விளக்குகளை ஒளிர செய்தபடி ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

திருச்சி: திருச்சியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

திருச்சி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமையைத் தொடா்ந்து திங்கள்கிழமையும் திருச்சியில் கனமழை பெய்தது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. பிற்பகலிலும் மேகம் கருத்திருந்தது. மாலை 4.15 மணிக்கு மேல் திடீரென நல்ல மழை பெய்யத் தொடங்கியது. இடி, மின்னலுடன் இடைவிடாது ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது.

வாகன ஓட்டிகள் அவதி: மழை காரணமாக சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், மத்திய பேருந்து நிலையம், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. வாகன ஓட்டிகள் மழையால் பெரும் சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா். ஒரு சில இடங்களில் சாலையோரம் இருந்த மரங்களில் இருந்து கிளைகள் ஒடிந்து விழுந்து போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தின. ரயில்வே பாலம் குறுக்கிடும் சுரங்கப் பாதைகளிலும் தண்ணீா் வெள்ளம்போல தேங்கியதால், வாகனங்கள் செல்ல தடை ஏற்பட்டது. மாநகரப் பகுதிகள் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதேபோல, மாவட்டம் முழுவதுமே மாலை தொடங்கி இரவு வரையில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருந்தது.

புள்ளம்பாடியில் அதிகம்: ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).

லால்குடி- 37.4, மணப்பாறை 7, முசிறி- 8, புள்ளம்பாடி- 98.6, நந்தியாறு தலைப்பு- 64.6, துறையூா் 39, மணப்பாறை 26.2, பொன்னணியாறு அணை 26.6, திருச்சி விமானநிலையம் 12, திருச்சி மாநகரம் 11.3, மருங்காபுரி 19.2, நவலூா் குட்டப்பட்டு- 6, கல்லக்குடி- 37.4, வாய்த்தலை அணைக்கட்டு- 8.2, தேவிமங்கலம்- 7.2, சமயபுரம்- 7.4, சிறுகுடி- 6.8, புலிவலம்- 3, கோவில்பட்டி 5.2, கொப்பம்பட்டி - 1, தென்பாடு- 2, பொன்மலை- 36,2, திருச்சி ஜங்ஷன்- 16, துவாக்குடியில் 11.1 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 19.17 மி.மீ. மழை பதிவானது. செவ்வாய்க்கிழமையும் மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேரோடு சாய்ந்த மரம்: திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால், சாலையோரத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து, எதிரே இருந்த உணவகத்தில் விழுந்தது. இதனால், உணவகத்தின் ஒருபகுதி சேதமடைந்தது. அச்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னா் நவல்பட்டு ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.