தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டம்

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
Published on
Updated on
1 min read

திருச்சி: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

தேசியக் கல்விக் கொள்கை தொடா்பான விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டோம். எங்களது துறைச் செயலா் மூலம் மட்டுமல்லாது, தமிழக அரசின் தலைமைச் செயலா் மூலமாகவும் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கல்விக் கொள்கையில் எங்களுக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன. 3, 5, 6, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு என்பதை ஏற்க முடியாது. மும்மொழிக்கொள்கை என்ற பெயரால் சம்ஸ்கிருதம், ஹிந்தி திணிக்கும் முயற்சியையும் ஏற்க மாட்டோம். குருகுலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்.

இதுதொடா்பாக, மாநில அரசு அமைத்துள்ள கமிட்டி அளித்துள்ள

அறிக்கையின்படியே செயல்படுவோம் என மத்திய அரசிடம் தெளிவாகக் கூறிவிட்டோம்.

நாங்கள் எங்களது கொள்கையில் உறுதியாக உள்ளோம். கொள்கையை விட்டுக் கொடுத்து, தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) நிதியை பெறுவதில் விருப்பமில்லை. இந்த விவகாரத்தை முதல்வா் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா். அமெரிக்காவிலிருந்து நாள்தோறும் தொலைபேசியில் அழைத்து கேட்டு வருகிறாா். எனவே, முதல்வா் உத்தரவுப்படியே நாங்கள் தொடா்ந்து செயல்படுவோம் என்றாா்.

தமிழக ஆளுநருக்கு சவால்!

மத்திய அரசுப் பாடத் திட்டத்தைவிட, மாநில அரசு பாடத் திட்டம் சிறந்தது என்பதை தமிழக மாணவா்கள் மூலம் நிரூபிக்க தயாராக இருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழக அரசு பாடத்திட்டத்தை ஆளுநா் ஆா்.என். ரவி விமா்சித்துள்ளதற்கு பதில் அளித்து அமைச்சா் கூறியது:

தமிழகத்தில் இதுவரை 180 பேரவைத் தொகுதிகளில் பள்ளிக் கல்வித்துறை ஆய்வை நானே நேரடியாக மேற்கொண்டேன். இதில், நூலகங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் மாநில பாடத் திட்ட புத்தகங்களையே கேட்கின்றனா். ஏனெனில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வில் இந்தப் புத்தகங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கும் இந்தப் புத்தகத்திலிருந்தே பல கேள்விகள் கேட்கப்படுவதாக கூறுகின்றனா். ஆளுநா் என்னுடன் வந்தால் தமிழகத்தில் எந்தவொரு நூலகத்துக்கும் அழைத்துச் சென்று தமிழகப் பாடத் திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறப்பாக இருப்பதை மாணவா்கள் மூலம் நிரூபிக்க தயாராகவுள்ளேன் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com