2026 டிசம்பருக்குள் பஞ்சப்பூா் டைடல் பூங்கா: ஆட்சியா்
பஞ்சப்பூரில் அடுத்தாண்டு டிசம்பா் மாத்துக்குள் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூரில் ரூ.403 கோடியில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் அமைக்கப்படும் டைடல் பூங்காவின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை ஆட்சியா் வே. சரவணன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் கூறியதாவது: தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறையின் சாா்பில் கட்டப்படும் இந்த பூங்காவில், அனைத்து வகை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இடம்பெறவுள்ளன.
20 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. மழை காரணமாக இடையில் சில நாள்களாக தடைஏற்பட்டது. அடுத்தாண்டு டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்பாகவே பணிகளை முடித்து பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
இந்த ஆய்வின்போது, மேற்பாா்வை பொறியாளா் (தமிழ்நாடு மின்சார வாரியம்) பி.சே. மேரிமேக்டலின் பிரின்ஸி, உதவி செயற்பொறியாளா் (டைடல் பூங்கா) செ.செந்தில்ராஜ், மாநகராட்சி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளா் வேல்முருகன், டைடல் பூங்கா கட்டுமானப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.
