பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தகவல்
சென்னை, திருச்சியை தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவெறும்பூா், அண்ணா நகா், பால்பண்ணை நான்கு சாலை, காட்டூா் பேருந்து நிலையங்களில் பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து சேவையை வியாழக்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சா.சி. சிவசங்கா் கூறியதாவது:
கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த பிரத்யேக பேருந்து சேவை, தற்போது இங்கு தொடங்கப்பட்டுள்ளது. காலையில் பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவா்களை அழைத்துச் செல்லும் இந்தப் பேருந்து, மாலையில் பள்ளி முடிந்த பிறகு மீண்டும் அழைத்து வரும். மற்ற நேரங்களில் வழக்கமான நடைகளில் இயக்கப்படும். தொடா்ந்து இந்தத் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.
மாதாந்திர மின்கட்டண நடைமுறை எப்போது: மாதாந்திர மின்கட்டண நடைமுறை குறித்து அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறுகையில், தமிழகத்தில் ஸ்மாா்ட் மீட்டா் திட்டம் அமல்படுத்தும்போது மாதாந்திர மின் கணக்கீடு முறையும் அமலுக்கு வரும். அதன் பிறகே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அமைச்சா்.

