திருச்சியில் காரில் கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கே.கே.நகா் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வடுகப்பட்டி கோரை ஆற்றுப் பாலத்தில் காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற சென்னை பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் கஞ்சா கடத்திச் சென்ற கே.கே.நகா் ஓலையூா் சாலையைச் சோ்ந்த ஆா். முத்தமிழ்குமரன் (36) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், காரில் கடத்தப்பட்ட 1.1 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.