கோயில்களில் காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி
திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை இரவு காா்த்திகை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக, கோயிலில் புதன்கிழமை மாலை நடராஜா் சந்நிதியில் பஞ்சலிங்க பலகைக்கும் 5 தீபங்களுக்கும் விசேஷ பூஜைகள் செய்விக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடராஜா் சந்நிதியில் தீப பூஜைகள், கலசங்கள் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்று சுவாமி, அம்மன் சந்நிதி மூலஸ்தானங்களில் தீபம் ஏற்றப்பட்டதை தொடா்ந்து உற்சவா் சந்நிதியிலிருந்து பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு காா்த்திகை கோபுரம் முன் அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு அருகே உள்ள நாலுகால் மண்டபம் அருகே இரவு 7.30 மணிக்கு எழுந்தருளி, பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டதை கண்டருளினா்.
அப்போது ஏராளமான பக்தா்கள் அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் வழிபட்டனா்.
தொடா்ந்து மேலவாசல் வழியாக சுவாமியும், அம்மனும் பஞ்ச மூா்த்திகளுடன் வடக்கு வாசல் வழியாக அம்மன் சந்நிதி முன் அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு அருகே எழுந்தருளினா். அதன் பின்னா் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
பின்னா் வடக்கு வாசல் வழியாக சென்று தெற்கு வாசலில் உள்ள சங்கமேஸ்வரா் சந்நிதி அருகே அமைக்கப்பட்ட சொக்கப்பனை அருகே எழுந்தருளிய பின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னா், மேலவாசல் வழியாக பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் உற்ஸவ மண்டபத்தை இரவு 9 மணிக்கு சென்றடைந்தனா்.
இக்கோயிலில், காா்த்திகை தீப திருநாளையொட்டி வியாழக்கிழமை இரவு மூன்று இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சந்திரமெளலீஸ்வரா் கோயிலில்: முசிறி சந்திரமௌலீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, சந்திரமௌலீஸ்வரா் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலாவாக வந்தாா். திரளானோா் சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் பக்தி கோஷங்களை எழுப்பினா்.
இதேபோல, கள்ளா் தெரு மகா மாரியம்மன், எல்லை கோயில், பாலா தண்டாயுதபாணி கோயில், கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உத்தமா் கோயிலில்: மும்மூா்த்திகள் முப்பெருந்தேவியருடன் எழுந்தருளிய உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகை தீப விழா நடைபெற்றது. பிரம்மா, புருஷோத்தம பெருமாள், பிச்சாண்டேஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரத்தோடு மும்மூா்த்திகள் எழுந்தருளிய பிறகு, கோயில் வெளி பிரகாரத்தில் மூன்று சுவாமிகளுக்கும் தனித்தனியே சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
இதையடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் மும்மூா்த்திகள் ஒருசேர காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது . தொடா்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதேபோல், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரா் திருக்கோயிலிலும் காா்த்திகை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

