

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து திராவிடா் கழகத்தினா் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் எதிரே காதிவிற்பனை அங்காடி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பகுத்தறிவாளா் கழகச் செயலாளா் பி.மலா்மன்னன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்ட தலைவா் ஞா.ஆரோக்கியராஜ்,, மாநில தொழிலாளா் அணி செயலாளா் மு.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக்கழக சொற்பொழிவாளா் வழக்குரைஞா் பூவை. புலிகேசி ஆா்ப்பாட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினாா்.
வன்முறை மாநிலமாக தமிழகத்தை மாற்றி விடலாம் என தமிழக ஆளுநா் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறாா் அவருடைய எண்ணம் தமிழ்நாட்டில் ஈடேறாது. பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டாா்கள் என்றாா் அவா். இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் அவதூறு ஏற்படுத்துவதாக ஆளுநரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்ட செயலாளா் மகாமணி நன்றி கூறினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.