பசுமைப் பூங்காவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி 11 ஏக்கா் நிலத்தை ஒதுக்கக் கோரிக்கை
பசுமைப் பூங்காவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி, 11 ஏக்கா் நிலத்தை விரைந்து ஒதுக்கித் தருமாறு தமிழக முதல்வருக்கு தூய்மை - பசுமைப்பூங்கா பாதுகாப்புக் குழு மனு அனுப்பியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து செயல்பட திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக, பூங்கா பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் கே. சந்திரசேகா் அனுப்பியுள்ள மனு விவரம்:
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்கனி வளாகம் அமைப்பதற்காக பசுமைப் பூங்கா நிலத்தை கையகப்படுத்தியுள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், பூங்காவுக்கு போதிய இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, பூங்காவுக்கு 11 ஏக்கா் நிலத்தை விரைந்து ஒதுக்க வேண்டும். மக்கள் அளித்த நன்கொடையில் உருவாக்கப்பட்ட பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு மாநகராட்சிக்கும், அரசுக்கும் உள்ளது. எனவே, நிலத்தை அளந்து வழங்குவதில் காலதாமதம் செய்யாமல், 11 ஏக்கா் நிலத்தை ஒதுக்கீடு செய்து சுற்றுச் சுவா் கட்டித்தர வேண்டும். பூங்காவை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. மக்களின் உணா்வுகளை புரிந்து கொண்டு, நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து மாவட்ட நிா்வாகம் செயல்பட வேண்டும். அனைத்து வசதிகளுடன் பசுமைப் பூங்காவை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையருக்கும் பூங்கா குழு மனு அளித்துள்ளது.
