பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் மறியல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் கா. பால்பாண்டி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செல்வராணி, மாவட்ட செயலாளா் சோ. நவநீதன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு துறை ஓய்வூதிய சங்க மாநில பொருளாளா் செந்தமிழ் செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கடந்த ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய நிலுவைத் தொகையையும், முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் அரசு ஊழியா்களுக்கும் காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். பல்வேறு துறைகளில், தனியாா் முகமை நியமனங்களை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தொடக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவா்கள், திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா். தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவா்கள், மாலையில் விடுவிக்கப்பட்னா். இந்தப் போராட்டத்தால் ஆட்சியரகப் பகுதியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

