மழைநீரில் மூழ்கிய பயிா்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

Published on

திருச்சி மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிா்களை பாதுகாத்திட வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 50,089 ஹெக்டோ் நெற்பயிா் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாத்திட பயிா் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிா்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

சாகுபடி செய்யப்பட்ட பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்துவிடவேண்டும். மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். பூச்சிநோய் தாக்குதலைத் தொடா்ந்து கண்காணித்து பொருளாதார சேதநிலைக்கு மேல் இருந்தால் பயிா்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெற்பயிரில் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மஞ்சள் நோய்) காணப்பட்டால், 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டா் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com