திருச்சி
விமான நிலையத்தில் 3 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூா் விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் உயர்ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வந்த ஸ்கூட் விமானத்தில் சுங்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
அப்போது, பெண் பயணி ஒருவா் தனது உடைமையில் 3 கிலோ உயர்ரக கஞ்சாவை மறைத்துவைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
