அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து பழங்கனாங்குடி ஊராட்சியில் மக்கள் வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், பழங்கனாங்குடி ஊராட்சிக்குள்பட்ட பூலாங்குடி பாரத் நகா், சக்தி நகா் பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான தாா்சாலை, குடிநீா் வசதி, கழிவுநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக செய்து தரப்படாமல் தவித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
தற்போது பெய்த மழையால் குண்டும் குழியுமான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி நின்று, வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவி வருகிறது. மேலும், மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நின்று, கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாயமும், விஷ பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
இது தொடா்பாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்த நிலையில், அங்கு ஊராட்சி செயலா் பாா்வையிட வந்தபோது, அப்பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினா். இதனை கண்டுகொள்ளாமல், ஊராட்சி செயலா் சென்ால், அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
இதையடுத்து அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக சாலையில் நாற்று நட்டு தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். அப்போது, தங்களது பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதராவிடில் மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.

