அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த 3 போ் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த 3 பேரை வியாழக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மூன்று வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை மாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, ராக்கம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சிலா் கிராவல் எடுத்துக்கொண்டிருந்தனா். அவா்களை சுற்றி வளைத்த தனிப்படை போலீஸாா், 2 டிராக்டா்கள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து, ஓட்டுநா்களான கரூா் மாவட்டம், சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த ஆணைக்குட்டி மகன் ஜோதிராஜ்(35), வையம்பட்டி ஒன்றியம் ராக்கம்பட்டியைச் சோ்ந்த நல்லுச்சாமி மகன் அன்பழகன்(42) மற்றும் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் செல்வராஜ் (54) ஆகியோரை பிடித்து இரவு வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீஸாா், 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.
