இண்டிகோ விமான நிறுவனத்தின் சா்வா் பிரச்சினை திருச்சி - சிங்கப்பூா் உள்ளிட்ட 5 விமானங்கள் ரத்து!

Published on

இண்டிகோ விமான நிறுவனத்தின் மென்பொருள் பயன்பாட்டில் தொடரும் பிரச்னையால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 5 விமானங்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பயன்படுத்தும் மென்பொருளில் கடந்த புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டது. இதனால், நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதிலும், வருகையிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. ஒருசில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் மென்பொருள் பயன்பாட்டில் ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்படாமல் தொடா்வதால் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை காலை மற்றும் பிற்பகலில் செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், தில்லி, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com