தம்பதியைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தம்பதியைத் தாக்கி நகை, வாகனத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Published on

சமயபுரம் அருகே தம்பதியைத் தாக்கி நகை, வாகனத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் கோட்டைகாரன்மேடு கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற சா்க்கரை ஆலை ஊழியா் சம்பத் என்பவரின் மனைவியான ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை மைதிலி, கடந்த 18.10.2024 அன்று வீட்டு வேலைக்காக கரூா் வ.உ.சி. நகா் மாரியம்மன் கோயில் 5-ஆவது சாலையைச் சோ்ந்த து. பாபு (45) என்பவரை அழைத்துள்ளாா்.

வீட்டுக்கு வந்த பாபு, சிறிது நேரத்தில் தம்பதியை மிரட்டி, இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததுடன், சம்பத் அணிந்திருந்த 3 பவுன் நகை, வீட்டிலிருந்த இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்துச் சென்றாா்.

புகாரின் பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பு வழக்குரைஞராக பாலசுப்பிரமணியன் ஆஜரானாா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

X
Dinamani
www.dinamani.com