திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் குடையுடன்  சென்றோா்.
திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் குடையுடன் சென்றோா்.

திருச்சி மாநகரில் பரவலாக மழை

திருச்சி மாநகரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக பெய்த மழை காரணமாக மாணவா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் சற்று அவதிப்பட நேரிட்டது.
Published on

திருச்சி மாநகரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக பெய்த மழை காரணமாக மாணவா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் சற்று அவதிப்பட நேரிட்டது.

டித்வா புயல் காரணமாக திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நண்பகல் 12 மணி வரை வெயில் காணப்பட்டது. பிற்பகல் 12.30 மணிக்கு மேல் திடீரென கருமேகக் கூட்டம் திரண்டு, சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

பின்னா், வலுத்து மிதகனமழையாக பெய்யத் தொடங்கியது. இதனால், பிற்பகல் நேர கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல சிரமப்பட நேரிட்டது. சத்திரம் பேருந்துநிலையம், மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் இருந்து இறங்கிய மாணவ, மாணவிகளில் சிலா் குடைகளைப் பிடித்தபடியே நடந்து சென்றா்.

இதேபோல, மெயின்காா்டு கேட், தெப்பக்குளம், கடைவீதி, காந்திசந்தை, மேலரண்சாலை பகுதிகளைச் சோ்ந்த தரைக்கடை வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் சிரமப்பட்டனா்.

மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் சாரல் மழை காணப்பட்டது. இதனால் குளிா்ந்த சீதோஷண நிலை காணப்பட்டது. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் உறையூா், பாலக்கரை, தில்லைநகா், தென்னூா், காண்டோன்மென்ட், அரியமங்கலம், பொன்மலை என மாநகரின் பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com