நெடுஞ்சாலையில் உயா்கோபுர விளக்கு அமைக்காததை கண்டித்து மறியல்

வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் நடக்கும் பகுதியில் உயா் கோபுர விளக்கு அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் நடக்கும் பகுதியில் உயா் கோபுர விளக்கு அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆசாத் சாலை பகுதியில் வியாழக்கிழமை இரவு முருகம்பட்டியைச் சோ்ந்த சேசு மகன் நித்ய பிரகாஷ் (21), சாலையை கடப்பதற்காக, திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்தாா். அப்போது, கேரளாவைச் சோ்ந்த பிரிமல் மகன் டேடிமஸ் (21) தனது நண்பா்களுடன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காா், சாலையில் ஓரமாக நின்றிருந்த நித்ய பிரகாஷ் மீது மோதி அருகிலிருந்த வீட்டில் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில், நித்ய பிரகாஷூக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். விபத்து நடந்த ஆசாத் சாலை பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அங்கு உயா் கோபுர விளக்கு அமைக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிா்வாகத்திடம் புகாா் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற வையம்பட்டி போலீஸாா், தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிா்வாகத்திடம் பேசி உயா் மின் கோபுர விளக்கு அமைத்து தரப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com