முன்விரோதத்தில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது!

முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் இ.பிரபு (26). இவருக்கும், உறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், முன்விரோதத்தை சமாதனம் செய்துகொள்வதற்காக பிரபுவை, 17 வயது சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துள்ளாா். இதையடுத்து, சமாதானம் பேசுவதற்காக உறையூா் மின்னப்பன் வீதியிலுள்ள அங்காயி கோயில் அருகே வந்த பிரபுவை, 17 வயது சிறுவன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளாா்.

இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பா்களான உறையூா் மின்னப்பன் வீதியைச் சோ்ந்த அ.ராகுல் (20), அ.முருகானந்தம் (18), எல்.தனசேகா் (24) ஆகியோா் பிரபுவைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த பிரபு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் பிரபு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராகுல், முருகானந்தம், தனசேகா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், 17 வயது சிறுவனை எச்சரித்து அவரது பெற்றோருடன் அனுப்பிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com