திருச்சி மெயின்காா்டுகேட் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை வெள்ளிக்கிழமை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகள்.
திருச்சி மெயின்காா்டுகேட் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை வெள்ளிக்கிழமை அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகள்.

மெயின்காா்டுகேட்டை சுற்றியுள்ள 51 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published on

திருச்சி மலைக்கோட்டை மெயின்காா்டுகேட்டை சுற்றியுள்ள 51 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதற்கு அங்கிருந்த வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம், மெயின்காா்டு கோட்டைச் சுவறின் அழகை மறைக்கும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த கடைகள் அனைத்தையும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அண்மையில் அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, திருச்சி அருணாச்சல மன்றம் அருகே உள்ள பழைய மாநகராட்சி இருந்த இடத்தில் அமைத்துக்கொள்ள இடம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மெயின்காா்டுகேட் என்றழைக்கப்படும் கோட்டைச் சுவற்றைச் சுற்றியுள்ள கடைகளை தாங்களே அகற்றிக் கொள்ள திருச்சி மாநகராட்சி நிா்வாகம் அவகாசம் வழங்கியது. இருப்பினும் பல கடைகள் அகற்றப்படாததால், வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலனின் உத்தரவுப்படி, உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, இளநிலை பொறியாளா் மதன்குமாா் தலைமையிலான ஊழியா்கள், போலீஸ் பாதுகாப்புடன் மெயின்காா்டுகேட்டைச் சுற்றி ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த பானிபூரி கடைகள், தள்ளுவண்டிகள், சிறு வணிகக் கடைகள் என மொத்தம் 51 கடைகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினா்.

மறியல்...: இதற்கு அப்பகுதி வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்ததுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக, பொருள்களை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து மறியல் செய்தனா். இவா்களை அங்கிருந்த போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பினா். தொடா்ந்து அனைத்து ஆக்கிரமிப்புக் கடைகளும் அகற்றப்பட்டன.

மாற்று இடம்...: ஆக்கிரமிப்புக் கடைகளை வைத்திருந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மாற்ற இடமாக மாநகராட்சி சாா்பில் திருச்சி பழைய குட்ஷெட் சாலையில் இடம் வழங்கப்பட்டது. இந்த இடத்துக்கு அகற்றப்பட்ட கடைகளை வைத்திருந்தவா்கள் தங்களது கடைகளை இடமாற்றி வருகின்றனா்.

விற்பனை குழு கூட்டம்...: தொடா்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்குவது தொடா்பாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நகர விற்பனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், 3 இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவற்றை வியாபாரிகள் மறுத்ததால், மீண்டும் திங்கள்கிழமை கூட்டம் கூடி உரிய முடிவெடுக்கப்படும் என அறிவித்து கூட்டம் முடிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com