திருப்பராய்த்துறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் கோரிக்கை
திருப்பராய்த்துறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போதுமான மழை, மேட்டூா் அணையிலிருந்து உரிய நேரத்தில் நீா் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. எனவே, திருப்பராய்த்துறை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
மேட்டூா் அணையிலிருந்து உரிய காலத்தில் நீா் திறந்துவிடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் திருப்பராய்த்துறை சுற்றியுள்ள பகுதிகளில் 350 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தி செய்த நெல்லை வேறு பகுதிகளில் உள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றுதான் விற்பனை செய்ய முடியும் அல்லது தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் விவாசயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, திருப்பராய்த்துறை சந்தை கூடும் பகுதி, சிவன் கோயில் நூற்றுக்கால் மண்டபம், வீராண்டி அம்மன் கோயில், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடல், தபோவனப் பள்ளியின் விளையாட்டுத் திடல் அல்லது நாடக மேடை, அணலை பஞ்சாயத்து கட்டடம் அல்லது சமுதாயக் கூடம், பெருகமணி காளி கோயில் சமுதாயக்கூடம், அந்தநல்லூா் கோயில் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் தகுதியுள்ள இடத்தை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தோ்வு செய்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
