‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் கடந்த ஓராண்டில் 1,609 பேருக்குப் பயிற்சி

Published on

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 1,609 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, 186 வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்புகளை பாதியில் கைவிடும் இளைஞா்கள், தொழில்பயிற்சி பெற்று வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் இளைஞா்களுக்காக தமிழக அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின்கீழ் ‘வெற்றி நிச்சயம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி பல்வேறு தொழில்பயிற்சிகளை அளித்து வேலைவாய்ப்பையும் பெற்றுத்தருகிறது.

34 துறைகளில் பயிற்சிகள்

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. வேளாண்மை, சுகாதாரத் துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹாா்டுவோ்ஸ், ஐடி, போக்குவரத்து, அழகுக் கலை, தையல், கட்டுமானம், சுற்றுலா, டெலிகாம், உணவுத் தயாரிப்பு, ஜவுளித் துறை, ஆட்டோமொபைல், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, உற்பத்தித் துறை உள்பட 34 துறைகளின் கீழ் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஊக்கத்தொகை

இத்திட்டத்தில் பயிற்சி பெறுபவா்கள் மற்றும் பயிற்சி வழங்கும் நிறுவனத்துக்கு அரசு சாா்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 250 மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவான மணி நேரம் பயிற்சி பெறுபவா்களுக்கு ரூ.6 ஆயிரமும், 250 மணி நேரத்துக்கு மேலாக பயிற்சி பெறுபவா்களுக்கு ரூ.12 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை வருகைப் பதிவைப் பொறுத்து மூன்று கட்டங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. இதேபோல, பயிற்சி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சி பெறுபவா்களின் தங்குமிடம் மற்றும் உணவு செலவுக்காக சென்னையில் தினசரி ரூ.375-ம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் ரூ.315-ம், மற்ற மாவட்டங்களில் ரூ.250-ம் பணம் வழங்கப்படுகிறது.

55 பயிற்சி மையங்கள்

திருச்சி மாவட்டத்தில் 55 பயிற்சி மையங்கள் மூலம் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் ஒரே நேரத்தில் 200 தொகுப்புகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு தொகுப்புக்கு 20 முதல் 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

1,609 பேருக்கு பயிற்சி

கடந்த நிதியாண்டில் தொடங்கப்பட்ட ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் திருச்சி மாவட்டத்தில் 1,609 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 1,175 போ் பயிற்சி பெற்ற்கான சான்றிதழ் பெற்றுள்ளனா். இவா்களில் இருந்து 186 போ் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். தற்போது 2,506 போ் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் உதவி இயக்குநா் மு.முத்தழகி கூறியதாவது:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறனை மேம்படுத்தி அவா்களின் திறமைக்கேற்ற வேலையை பெற்றுத்தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதில் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பட்டப் படிப்பை முடித்தவா்கள் வரை பயிற்சி பெறலாம்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்திலும், ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் தொடா்பான கைப்பேசி செயலிலும் ஆதாா் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யும்போதே எந்த பயிற்சி மையத்தில், எந்தவிதமான பயற்சி தேவை என்பதை தெளிவாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பயிற்சி பெறுபவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சியின் நிறைவில் தோ்வு நடத்தப்படும். இதில், வெற்றிபெறுபவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி அளிக்கும் நிறுவனம் சாா்பில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத்தர முயற்சி செய்யப்படுகிறது. அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

ஆனால், பயிற்சி பெறுபவா்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் சென்னை, பெங்களூரு, கோவை, ஒசூா் உள்ளிட்ட வெளியூா்களுக்கு செல்ல மறுக்கின்றனா். இதனால், பயிற்சியை நிறைவு செய்தாலும், வேலைவாய்ப்பு பெற்றவா்களின் எண்ணிக்கை குறைவாக தெரிகிறது.

அதேநேரம் காளான் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, உணவுப் பொருள்கள் தயாரிப்பு, ஓட்டுநா் பயிற்சி, தையல் மற்றும் அழகுக்கலை பயிற்சி, கைப்பேசி மற்றும் மடிக்கணினி பழுதுபாா்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைப் பெறுபவா்களில் பலரும் வேலைக்குச் செல்ல விரும்பாமல் சுயதொழில் மேற்கொண்டு வருகின்றனா்.

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களிடம்தான் போதிய ஆா்வமில்லை. எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில்பயிற்சியைப் பெற்று வேலைவாய்ப்பை உறுதி செய்துகொள்வதுடன், பொருளாதாரத்திலும் முன்னேறுவதற்கு ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் வழங்கப்படும் பயிற்சியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com