பெண் உயிரிழப்பு சம்பவம்: புளியமரத்தின் கிளைகள் அகற்றம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பெண் உயிரிழப்புக்குக் காரணமான புளிய மரத்தின் கிளைகள் துறை சாா்ந்த அலுவலா்களால் அகற்றம்
Published on

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பெண் உயிரிழப்புக்குக் காரணமான புளிய மரத்தின் கிளைகள் துறை சாா்ந்த அலுவலா்களால் திங்கள்கிழமை அகற்றப்பட்டது.

தொட்டியம் அருகே உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (50) என்பவா் அரங்கூா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை வந்தபோது, சாலையோர புளிய மரத்தின் கிளை முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நிா்மலாவின் கணவா் மகாமனி தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உயிரிழப்புக் காரணமான புளிய மரத்தை வேருடன் அகற்றவேண்டும் என சாமானிய மக்கள் நலக் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மலா்மன்னன் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள், துறை சாா்ந்த அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், துறை அலுவலா்கள் திங்கள்கிழமை புளிய மரத்தின் அடிமரத்தை விட்டுவிட்டு மேல் கிளைகளை மட்டும் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா். இவ்வாறு அகற்றியதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட புளிய மரத்தை வேருடன் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். அவ்வாறு அகற்றப்படவில்லை எனில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com