கொலை முயற்சி வழக்கு: இருவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை முயற்சி வழக்கில் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
Published on

திருச்சியில் கொலை முயற்சி வழக்கில் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் அ.சபீா் அகமது (23). சைக்கிளில் டீ விற்கும் இவருக்கும் சங்கிலியாண்டபுரம் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ச.விஜய் (22), சு.விக்னேஷ்வா் (25) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பா் 23 இரவு சபீா் அகமது மதுக் கூடத்தில் மது அருந்தியபோது, அங்கு வந்த விஜய், விக்னேஷ்வருடன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற சபீா் அகமதுவை பின்தொடா்ந்து சென்ற இருவரும் அவரை அரிவாளால் வெட்டினா். இதில் படுகாயமடைந்த சபீா் அகமது சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் மேற்கண்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க பாலக்கரை காவல் ஆய்வாளா் பரிந்துரைத்திருந்தாா்.

அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com