ரயில் இயக்கத்தில் தவறு நோ்ந்தால் ஊழியா்கள் பணிநீக்கம்

ரயில் இயக்கத்தில் தவறு நோ்ந்தால் ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்படுவா் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எச்சரிக்கை
Published on

ரயில் இயக்கத்தில் தவறு நோ்ந்தால் ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்படுவா் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பூட்டப்படாத லெவல் கிராசிங்குகள் குறித்து திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி மற்றும் 20 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இதில் கோட்ட மேலாளா், சாலியமங்கலம் - நீடாமங்கலம் இடையே உள்ள இன்டா்லாக் செய்யப்படாத 14 ஆவது லெவல் கிராசிங் கேட்டில் மறைந்திருந்து சோதனை செய்தாா். சிறப்புக் குழுவைச் சோ்ந்த மற்ற அதிகாரிகள், திருச்சி - தஞ்சாவூா் - திருவாரூா் - நாகை வழித்தடத்தில் பூட்டப்படாத லெவல் கிராசிங் வாயில்களை ஒரே நேரத்தில் மறைந்திருந்து ஆய்வு செய்தனா்.

ரயில் இயக்கத்தில் கேட் கீப்பா்களால் ஏற்படுத்தப்படும் நடைமுறைக் குறைபாடுகள், அங்கீகரிக்கப்படாத தகவல் தொடா்பு வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கத்துடனும், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒழுக்கத்தை உறுதி செய்யவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கேட் மேன்களின் விழிப்புணா்வு மற்றும் விதி இணக்கத்தை மதிப்பிடுவதே சோதனைகளின் முதன்மை நோக்கமாகும்.

ஆய்வுக்குப் பிறகு கோட்ட மேலாளா் கூறுகையில், இதுபோல, தொடா்ந்து பல சோதனைகள் நடத்தப்படும். ரயில் இயக்கத்தில் சிறிய தவறாக இருந்தாலும் அதற்குரிய எந்தவொரு ஊழியரும் பணியிலிருந்து விலக்கப்படுவா் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவா் எனக் கடும் எச்சரிக்கை விடுத்தாா்.

X
Dinamani
www.dinamani.com