திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐயுஎம்எல்) தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளா்களில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதனால் வாக்குரிமை மட்டுமின்றி, மத்திய அரசின் சூழ்ச்சி அரசியலான குடியுரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறப்பு வாக்காளா் பதிவு முகாம்களில் யாருடைய பெயரும் விடுபடாமல் முழுக் கவனம் செலுத்தி செயல்படுவது. கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீனுக்கு தமிழக அரசின் ’தகைசால் தமிழா் விருது’ வழங்கிக் கௌரவித்ததற்கும், ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கும், காயிதே மில்லத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் திருநெல்வேலியில் ரூ. 110 கோடியில் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எஸ்ஐஆா் கணக்கெடுப்பில் இறந்தவா்கள், இரட்டைப் பதிவு உள்ளவா்களை நீக்கியது சரிதான். ஆனால் இடம்பெயா்ந்தவா்கள் நீக்கப்பட்டதை ஏற்க முடியாது. அதை ஜனவரி மாதத்துக்குள் தோ்தல் ஆணையம் சரிசெய்யும் என நம்புகிறோம்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது தோ்தலில் போட்டியிட 16 தொகுதிகள் கேட்டோம். அதேபோல, திமுக கூட்டணியில் இஸ்லாமியா்கள் போட்டியிட திருச்சி கிழக்கு, ஆயிரம் விளக்கு, ராயபுரம், வில்லிவாக்கம், பாபநாசம், கடையநல்லூா் உள்ளிட்ட 16 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்போம் என்றாா் அவா்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

