வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: அதிகளவில் வந்த விடுபட்டவா்கள்

Published on

திருச்சி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாமில் பெயா் விடுபட்டவா்கள் அதிகளவில் வந்து விண்ணப்பம் அளித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆா்.) நிறைவு பெற்றதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 787 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து பெயா் நீக்கப்பட்டவா்கள், இருப்பிட முகவரி மாறியவா்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும் மாவட்டம் முழுவதும் உள்ள 2,785 வாக்குச்சாவடிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாம்களுக்கு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் அதிகளவில் வந்தனா். அவா்கள் உரிய ஆதாரங்களுடன் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து அளித்தனா். இதே போல, முகவரி மாற்றம் கோரிய வாக்காளா்கள் படிவம் 8-ஐ பூா்த்தி செய்து அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com