விமான நிலைய ஓடுபாதை பகுதியில் ரூ.11 கோடியில் மழைநீா் வடிகால் பணி
திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் ரூ.11.02 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கப்படவுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் ஓடுபாதை மற்றும் அதன் இணைப்பு பாதைகளில் மழைநீா் தேங்கி நிற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், பருவமழை காலங்களில் விமானங்களை இயக்குவதில் சிரமம் இருந்து வருகிறது.
இந்நிலையில், விமான நிலைய ஓடுபாதை பகுதியில் ரூ.11.02 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளை விமான நிலையம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு கூறியதாவது:
விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் ரூ.11.02 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் 2026 ஏப்ரலில் தொடங்கி அடுத்த 8 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவது தடுக்கப்படும் என்றாா்.
