திருச்சி மத்திய சிறையிலிருந்து பி.ஆா். பாண்டியன் விடுதலை!
திருச்சி மத்திய சிறையிலிருந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்ட இருவா் திங்கள்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
இருவருக்கும் சிறை நுழைவாயிலில் விவசாயிகள் சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள் என நூற்றுக்கணக்கானோா் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனா்
காவிரி- டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் திருவாரூா் மாவட்டம், கரியமங்கலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்தியதாக, பி.ஆா்.பாண்டியன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட 22 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூா் அமா்வு நீதிமன்றம், பி.ஆா்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிறரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீா்ப்பை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆா்.பாண்டியன் தரப்பில், சென்னை உயா் நீதிமன்றத்தில் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு செய்ததால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டது.
உயா்நீதிமன்றம் அளித்த பிணையின்பேரில், திருச்சி மத்திய சிறையிலிருந்து பி.ஆா். பாண்டியன், செல்வராஜ் ஆகிய இருவரும் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா். இருவருக்கும், சிறைவாசலில் விவசாயிகள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில், தீட்சிதா் பாலு, புங்கனூா் செல்வம், மணிமாறன், துரைசாமி, மேகராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா். இதனைத்தொடா்ந்து, விவசாயிகளுடன் திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதிக்கு வந்த பி.ஆா். பாண்டியன், அப் பகுதியிலிருந்த காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அனைத்து விவசாயிகளுக்குமான அச்சுறுத்தல்!
சிறையிலிருந்து விடுதலையான பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரியமங்கலத்தில் நாங்கள் ஆா்ப்பாட்டம் மட்டுமே நடத்தினோம். மேலும், அங்கு கட்டுமானப் பொருள்களுக்கு எந்தவித சேதமும் கிடையாது. ஏற்கெனவே அடிப்படை பணிகளை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனா்.
இருப்பினும், ஒப்பந்ததாரா் பெயரில், ஓஎன்ஜிசி நிறுவனம் தூண்டுதலால், காவல்துறையை வசப்படுத்தி இந்த வழக்கை பதிவு செய்தனா். 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து, பலமுறை தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத் தீா்பை ஏற்று சிறை சென்று, உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பிணை மூலம் விடுதலையாகியுள்ளோம்.
காவிரி-டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகள், கா்நாடகம், ஆந்திரம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகளும் போராடினா். தமிழக அரசும், காவல்துறையும் பிணை மீதான விசாரணையில் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் யாா் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. அரசியல் பேசவும் விரும்பவில்லை.
தண்டனையானது எங்களது இருவருக்கு கிடைத்த தண்டனையாக கருத முடியாது. தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் கிடைத்த தண்டனையாகவே உள்ளது. போராடும் விவசாயிகளுக்கான அச்சுறுத்தலையும், சவாலையும் எதிா்கொண்டு, மண் மீட்புக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.
அய்யாக்கண்ணு கூறுகையில், தமிழகத்தில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறும் தமிழக முதல்வா், வழக்குகளை திரும்பப் பெற்று, பி.ஆா். பாண்டியன் மீதான வழக்கிலும் நீதி கிடைக்க துணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

