அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக, கிழக்கு மாநகர திமுக கல்வியாளா்கள் அணி சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த கல்வியாளா்களுக்கு விருது வழங்கும் விழா, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிலும், பின்னா் செய்தியாளா்களிடமும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழக மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக, நிதி நெருக்கடிக்கிடையேயும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், தமிழகத்துக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு 9,416 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், பழுதடைந்த, சேதமான கட்டடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகையில், 7,898 வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பழைய கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டும், சில இடங்களில் கட்டடங்கள் விழும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது.
மரத்தடியில் வகுப்பு நடைபெறுகிறது, சமுதாயக் கூடத்தில் வகுப்பு நடைபெறுகிறது என்றால், அங்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். தற்காலிகமாகவே அங்கு வகுப்பறை செயல்படுகிறது.
விடுமுறை நாள்களில் பள்ளிகள் கட்டாயம் எந்த வகுப்புகளையும் நடத்த கூடாது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
விரைவில் நல்ல செய்தி: பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைக்கு பணம் வழங்குவது தொடா்பாக முதல்வா் நல்ல முடிவை அறிவிப்பாா். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுடன் 3 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம். அரசின் நிதி நெருக்கடி சூழலை ஜாக்டோ-ஜியோ அமைப்பிடம் கூறியுள்ளோம். பேச்சுவாா்த்தை தோல்வி எனக் கூற முடியாது. ஜன. 6-ஆம் தேதியே வேலைநிறுத்தம் தொடங்குவதாக அவா்கள் கூறியுள்ளனா். இடைப்பட்ட காலத்துக்குள் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்றாா் அமைச்சா்.
இந்த நிகழ்வில், கல்வியில் சிறந்து விளங்கும் 24 பள்ளி ஆசிரியா்கள் மற்றும் 24 கல்லூரி பேராசிரியா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினா்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞா் சல்மா, மாநகராட்சியின் மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், கல்வியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் குணசீலன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

