

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் பகுதியிலுள்ள அணுகுசாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் முதல் சா்க்காா்பாளையம் வரை அணுகு சாலை உள்ளது. இந்தச் சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சா்க்காா்பாளையம் உள்ளிட்ட கல்லணை சாலையில் உள்ள பகுதிகளில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு வருவதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், அணுகு சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்டித்தும், அதற்கு தீா்வுகாண கோரியும் அப்பகுதி மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.