வைகுந்த ஏகாதசி: டிச.30-இல் திருச்சிக்கு உள்ளூா் விடுமுறை!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பையொட்டி டிசம்பா் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா, இந்த ஆண்டு டிச.19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு டிச. 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே, திருச்சி மாவட்டத்துக்கு டிச.30-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.24-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
