‘சாதனைகள் புரிய வாசிப்புப் பழக்கம் உதவும்’
திருச்சி: சாதனைகள் புரிய வாசிப்புப் பழக்கம் உதவும் என எழுத்தாளா் லேனா தமிழ்வாணன் தெரிவித்தாா்.
திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவேரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் நடத்தும் மாநகராட்சி படிப்பகத்துக்கு எழுத்தாளா் லேனா தமிழ்வாணன் தன்னுடைய 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை திங்கள்கிழமை வழங்கினாா்.
இதனை படிப்பகத்தின் நூலகக் கமிட்டித் தலைவா் இராம. முத்து மற்றும் உறுப்பினா்கள் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் லேனா தமிழ்வாணன் பேசியது: மாணவா்கள், இளைஞா்கள் வாசிப்பதை ஒரு நிரந்தர பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நூல்களைத் தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும். வாசிப்பே அறிவின் திறவுகோல். வாசிப்புப் பழக்கம் இளைஞா்களின் மனதில் செயற்கரிய செயல்களைச் செய்ய ஆா்வத்தைத் தூண்டும். மாணவா்களிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பெற்றோா்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
இளம்வயதில் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் மாற்றமானது, பிற்காலத்தில் மகத்தான சாதனைகளைச் செய்ய உதவியாக இருக்கும் என்றாா்.
முன்னதாக, நலச்சங்கத்தின் மூத்த உறுப்பினா் ரியாஜ்அகமது வரவேற்றாா். நலச்சங்கத்தின் செயலா் துரை. செந்தில்குமாா், சமூக ஆா்வலா் பாரதி, புலவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

