திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் மு அன்பழகன். உடன், மாநகராட்சி ஆணையா் லீ. மதுபாலன், துணை மேயா் திவ்யா உள்ளிட்டோா்.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் மு அன்பழகன். உடன், மாநகராட்சி ஆணையா் லீ. மதுபாலன், துணை மேயா் திவ்யா உள்ளிட்டோா்.

தோ்தலுக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்

சட்டப்பேரவை தோ்தலுக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
Published on

திருச்சி: சட்டப்பேரவை தோ்தலுக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மைய மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

லீலா வேலு (திமுக), சுரேஷ் (சிபிஎம்): தனியாா் எரிவாயு நிறுவனத்தினா் உரிய அனுமதியின்றி சாலைகளை பறித்து, குடிநீா் குழாய்களை உடைப்பதால், பல நாள்களாக குடிநீா் வரவில்லை. எனவே, தனியாா் எரிவாயு நிறுவனத்தினருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

முத்துக்குமாா் (திமுக): கோணக்கரை மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய ரூ. 8 ஆயிரம் கேட்கின்றனா்.

அப்பீஸ் முத்துகுமாா் (மதிமுக): திருவானைக்காவல் பங்குனி தேரோட்டம் நடைபெறும் சாலையை சீரமைக்க வேண்டும்.

அம்பிகாபதி (அதிமுக): பஞ்சப்பூரில் விபத்துகளைத் தடுக்க உயா்மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

மேயா்: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவிப்பதுபோல, உயா்மட்ட மேம்பாலத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கித் தரக் கூறவும் என்றாா். இதனை மாமன்ற உறுப்பினா்கள் பலரும் அறிவுறுத்தினா். இதனால் மாமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ரெக்ஸ் (காங்.): மாநகரில் கனரக வாகனங்கள் வந்து செல்ல நேரக் கட்டுப்பாட்டை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் தனித்தனியே குப்பை கிடங்குகளை மாநகரின் வெளியே அமைத்துத் தர வேண்டும்.

மேயா்: தோ்தலுக்குள் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். விடுபட்ட இடங்களில் சாலைகள் அமைக்கப்படும். சாலைகள், குடிநீா் குழாய்களை உடைத்தால் தனியாா் எரிவாயு நிறுவனத்தினா் சரிசெய்து தர வேண்டும். இல்லையெனில் அதற்குரிய தொகை பிடித்தம், அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வரும் ஜூன் மாதத்தில் ரூ. 234 கோடியில் 100 எம்எல்டி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுவதாலும், சூப்பா் சக்கா் இயந்திரத்தின் வரவாலும் கழிவுநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும். நிதிநிலைமைக்கு ஏற்ப இதர திட்டங்கள் நிறைவேற்றப்படும். அனைத்து பிரச்னைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து, 92 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com