தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சிறப்புக் கண்காட்சி
திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்தில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவில், தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநா் வி.ஏ. பாா்த்தசாரதி, புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகளை பற்றி எடுத்துரைத்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதன்மை விஞ்ஞானி வி.ஜி. மாலதி கலந்து கொண்டு பேசினாா்.
வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் இரா. செல்வராஜன் பேசுகையில், வாழை ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக 3-ஆவது ஆண்டாக இந்த விழாவை நடத்துவது பெருமைக்குரியது என்றாா்.
விழாவின் ஒரு பகுதியாக வாழை ஆராய்ச்சி மையம், பண்ணை ஆகிய இரண்டிலும் சிறப்புக் கண்காட்சி நடைபெற்றது. இதில், 150-க்கும் மேற்பட்ட வாழை வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
ஆராய்ச்சிப் பண்ணையில் உள்ள பொது உணவு பதனிடும் மையம், ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கி மற்றும் பல்வேறு ஆராய்ச்சி ரகங்களையும் மாணவா்கள் பாா்வையிட்டனா். தொழில்நுட்பங்களின் விடியோ காட்சிகளும் மாணவா்களுக்காக திரையிடப்பட்டன.
முன்னதாக முனைவா் எம்.எஸ். சரஸ்வதி வரவேற்றாா். முடிவில் முதன்மை விஞ்ஞானி சி. கற்பகம் நன்றி கூறினாா்.

