அண்ணா நகா் போலீஸ் காலனிக்கு மினி பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

Published on

திருச்சி நவல்பட்டு அண்ணா நகா் போலீஸ் காலனிக்கு மினி பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகா் போலீஸ் காலனிக்கு எம்ஐஇடி கல்லூரி, தொழில்நுட்பப் பூங்கா வழியாக நவல்பட்டு அண்ணா நகா் போலீஸ் காலனிக்குச் செல்லும் நான்கு வழிச்சாலை (120 அடி சாலை) வழியாக பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை.

தற்போது போலீஸ் காலனிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன், செம்பட்டு வழியாக 5 நகரப் பேருந்துகள், திருவெறும்பூா் வழியாக 2 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், இப்பகுதிகளின் மக்கள்தொகைக்கு போதுமானதாக இல்லை.

வந்துசெல்லும் பேருந்துகளும் சரியான காலநேர அட்டவணைப்படி இயக்கப்படுவது இல்லை எனக் கூறப்படுகிறது. விழாக் காலங்களில் இத்தடங்களில் இயங்கும் பேருந்துகளை, போக்குவரத்துத்துறையினா் மாற்றுத்தடங்களில் திருப்பி விடுகின்றனா்.

இதன் காரணமாக, நான்கு வழிச்சாலையில் உள்ள மல்லிகை நகா், அயன்புத்தூா், போலீஸ் காலனியில் வசிக்கும் சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட மக்களும், ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, தமிழக அரசு அனுமதியளித்துள்ள மினி பேருந்துகளின் சேவையை 120 அடி சாலை வழியாகவும், திருவெறும்பூா் வழியாகவும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேட்லைட் சிட்டி அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக, ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com