இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

Published on

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில் இணைப்பே இலக்கியம் எனும் தலைப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு, திருச்சி எம்ஐஇடி கல்லூரியில் நடைபெறுகிறது. முதல்நாள் மாநாட்டை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை முனைவா் ஜெ. ராஜா முஹம்மது தலைமையில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில், முன்னாள் எம்எல்ஏ-வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான மு. தமிமுன் அன்சாரி வாழ்த்திப் பேசினாா்.

இதில் காப்பியம், சிற்றிலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, புதினம், நாடகம், ஒப்பாய்வு, வரலாறு, பண்பாடு, நாட்டுப்புறவியல், மாா்க்கம், ஞான இலக்கியம் என 11 அமா்வுகளில் 118 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டு பல்வேறு பேராசிரியா்கள், ஆய்வறிஞா்கள் பேசினா். ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவையும், 30 நூல்களும் வெளியிடப்பட்டன.

தொடா்ந்து, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் மாா்க்க அறிஞா் அரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூா், இந்தியா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாா்க்க அறிஞா்கள் பேசினா்.

பிற்பகலில் இஸ்லாமும் பெண்களும் எனும் தலைப்பில், தமிழக வக்ஃப் வாரிய உறுப்பினா் ஃபாத்திமா முஸப்பா் தலைமையில் மகளிா் அரங்கம் நடைபெற்றது. முனைவா் பா்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினாா்.

பின்னா், ஊடகம்-கவலையும் கவனமும் என்னும் தலைப்பில் ஊடக அரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கியக் கழக துணைத் தலைவா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்ற அரங்கத்தில், எஸ்டிபிஐ கட்சியின் தலைவா் நெல்லை முபாரக் சிறப்புரையாற்றினாா். இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த ஊடகவியலாளா்கள் பலா் பேசினா்.

இரவு 9 மணிக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் தலைமையில் தீனிசை அரங்கம் நடைபெற்றது.

மாநாட்டின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் விசிக தலைவா் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம். ஹெச். ஜவாஹிருல்லா ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

மாலையில் திருச்சி என். சிவா எம்பி நிறைவுரையாற்றுகிறாா். ஏற்பாடுகளை, மாநாட்டு நெறியாளா்கள் கே.எம். காதா்மொகிதீன், திமு. அப்துல் காதா், ஜி.எம். அக்பா் அலி, அமைப்பாளா்கள் சேமுமு. முகமதலி, அகமது மரைக்காயா், ஷாஜஹான், வரவேற்புக் குழுத் தலைவா் முஹம்மது யூனுஸ் ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com