மணப்பாறையில் காரில் கடத்திவந்த ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காரில் கடத்திவந்த சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டது. இதுதொடா்பாக தப்பியோடிய 4 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மணப்பாறையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், காவலா் தினேஷ் உள்ளிட்ட போக்குவரத்து போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் வடக்கிப்பட்டி சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் விராலிமலை மாா்க்கத்திலிருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற புதுதில்லி பதிவு எண் கொண்ட காரைப் போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது போக்குவரத்து போலீஸாருக்கு போக்குகாட்டி மணப்பாறை நகருக்குள் விரைந்து சென்றது. காரை உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், காவலா் தினேஷ், காவல்நிலையத்தில் பணியிலிருந்த காவலா் அழகா் உதவியுடன் கோவில்பட்டி சாலையில் மடக்கிப் பிடித்தனா்.

அப்போது காரில் மதுபோதையிலிருந்த 4 போ் காரிலிருந்து இறங்கி தப்பியோடினா். காா் நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளா் காவியா, ஆய்வாளா் முத்து தலைமையிலான போலீஸாா் காரை மணப்பாறை காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று சோதனையிட்டனா்.

அப்போது காரிலிருந்து சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான 42 பண்டல்களாக 85 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீஸாா் காரிலிருந்து 4 போலி பதிவெண்கள் கொண்ட நம்பா் பிளேட்கள், மடிக்கணினி போன்றவைகளைப் கைப்பற்றினா். தப்பியோடிய 4 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com