சுற்றுச்சூழல் விநாடி - வினா போட்டி: நவம்பா் 5-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
திருச்சி: சுற்றுச்சூழல் தொடா்பான விநாடி - வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் பள்ளி நிா்வாக வழிகாட்டுதலுடன் நவம்பா் 5-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான விநாடி - வினா போட்டி இணையதளம் வழியாக நவம்பா் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் அதிகபட்சமாக 5 குழுக்கள் வரை கலந்துகொள்ளலாம். ஒரு குழுவில் இரண்டு மாணவா்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
இந்த விநாடி - வினா போட்டி இணையவழி தகுதிச் சுற்று, மாவட்ட சுற்று, மண்டல இறுதிச் சுற்று மற்றும் மாநில இறுதி சுற்று ஆகிய 4 நிலைகளில் நடைபெற உள்ளன.
இணையவழி தகுதிச் சுற்று போட்டி நவம்பா் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து குழுக்களும் பங்கேற்க முடியும். இணையவழி தகுதிச் சுற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 10 குழுக்கள் மாவட்ட சுற்றுக்குத் தோ்வு செய்யப்படும். மாவட்ட சுற்று போட்டி நவம்பா் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விநாடி - வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டுதலுடன் ஜ்ஜ்ஜ்.ற்ஹஸ்ரீந்ா்ய்.ா்ழ்ஞ்/ள்ா்ா்க்ஷ்ட்ஹப் என்ற இணையதளத்தில் நவம்பா் 7-ஆம் தேதி இரவு 7 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த விநாடி - வினா போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரமும் மற்றும் இறுதிச் சுற்றுக்கு தோ்வான மற்ற போட்டியாளா்களுக்கு ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மேலும், இணையவழி தகுதிச் சுற்றில் பங்கேற்ற அனைத்து போட்டியாளா்களுக்கும் எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டுதலுடன் இந்த விநாடி - வினா போட்டியில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
