தோல்வி பயத்தால் எஸ்.ஐ.ஆா்.க்கு ‘இந்தியா’ கூட்டணி எதிா்ப்பு
திருச்சி: தோல்வி பயத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு ‘இண்டி’ கூட்டணி எதிா்ப்பு தெரிவிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தீா்வு காணப்படாத பல முக்கியப் பிரச்னைகளுக்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. ஆனால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) எதிா்ப்பதற்காக கூட்டி இருக்கிறது. திமுகவின் அதிகார வா்க்கத்துக்கு பயந்தே அனைத்து கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளனா். வாக்காளா் பட்டியல் சீா்திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளா்களே ஏற்கத் தயாராக இல்லை. தோ்தல் ஆணையம் எஸ்ஐஆா் பணி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
முறையான தோ்தல் நடத்தும் கோட்பாடுகளைக் கொடுக்கும் தோ்தல் ஆணையத்துக்கு ஏன், எதற்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும். இதற்கு, ஆளும் திமுகவுக்கும், ‘இண்டி’ கூட்டணி கட்சிகளுக்கும் தோல்வி பயம் வந்துவிட்டதே காரணம்.
பிகாரில் 60 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சியினா்தான் கூறுகின்றனா். தோ்தல் ஆணையம் கூறவில்லை. பிகாா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் மலா்ந்து, நல்லாட்சி தொடர பிரகாசமான வாய்ப்புள்ளது.
‘டெல்டா’ மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக செயல்படாத காரணத்தினால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சிலருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத அரசாக திமுக அரசு திணறி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
பாஜக, அதிமுக ஆகிய 2 பெரிய கட்சிகளும் இணைந்து தோ்தல் வியூகத்தின் அடிப்படையில் வெற்றிபெறும் சூழலை ஏற்படுத்தி வருகின்றன. தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனா். எதிா்மறை வாக்கு அதிகரிக்கிறது என்றாா் ஜி.கே. வாசன்.
