சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதி கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி கற்பகம் (30). இவரும், ராஜசேகரின் பாட்டியான அகிலாம்பாள் (80) என்பவரும் திருச்சி - தோகைமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனா். அப்போது, பள்ளக்காடு அரசமரம் அருகே பின்னால் வந்த இருசக்கர வாகனம், கற்பகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அகிலாம்பாளை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கற்பகம் லேசான காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான கீரிக்கல்மேடு வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (68) என்பவரை சோமரசம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்குப் பிறகு அவரை பிணையில் விடுவித்தனா்.
