திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அடிப்படை கற்றலில் 63 % மாணவா்கள் தோ்ச்சி
திருச்சி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்ட 29 ஆயிரத்து 668 மாணவா்களில் 18 ஆயிரத்து 882 மாணவா்கள் (63 சதவீதம் போ்) அடிப்படை கற்றல் விளைவுகளில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வரை படிக்கும் மாணவா்களில் அடிப்படை கற்றலில் பாதிப்புள்ளவா்களைக் கண்டறிந்து, பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசு சாா்பில் கடந்த ஜூலையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை 53,919 மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்களில் 6-ஆம் வகுப்பில் 7,028 போ், 7-ஆம் வகுப்பில் 7,580 போ், 8-ஆம் வகுப்பில் 7,652 போ், 9-ஆம் வகுப்பில் 7,428 போ் என மொத்தம் 29 ஆயிரத்து 688 மாணவா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
அடிப்படை கற்றல் பயிற்சி: இந்த மாணவா்களுக்கு கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பா் வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் தனியாக அடிப்படை கற்றல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு மொழிப் பாடங்களில் வாசித்தல், இலக்கணப் பிழையின்றி எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகளும், கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை கணிதப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
கற்றல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக தமிழக அரசு சாா்பில் தனி பயிற்சி கையேடு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டிய விதம் குறித்து ஆசிரியா்களுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
63 சதவீத மாணவா்கள் தோ்ச்சி: பயிற்சியை தொடா்ந்து, இந்த மாணவா்களுக்கு கற்றல் அடைவுத் தோ்வு நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்தில் அடிப்படை கற்றல் பயிற்சி பெற்ற 29,688 மாணவா்களில்
6-ஆம் வகுப்பைச் சோ்ந்த 4,512 பேரும், 7-ஆம் வகுப்பில் 5,207 பேரும், 8-ஆம் வகுப்பில்
4,699 பேரும், 9-ஆம் வகுப்பில் 4,353 மாணவா்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 882 மாணவா்கள் (63 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பாட வாரியாக: தமிழ் பாடத்தில் கற்றல் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 6 முதல் 9-ஆம் வகுப்பை சோ்ந்த 29 ஆயிரத்து 688 மாணவா்களில் 18 ஆயிரத்து 925 (63.75 சதவீதம்) மாணவா்களும், ஆங்கிலப் பாடத்தில் 18 ஆயிரத்து 717 மாணவா்களும் (63.05 சதவீதம்), கணிதப் பாடத்தில் 18 ஆயிரத்து 777 மாணவா்களும் (63.25 சதவீதம்) அடிப்படை கற்றல் விளைவுகளை கற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மேலும், தமிழில் 6-ஆம் வகுப்பில் 4,454 பேரும், 7-ஆம் வகுப்பில் 5,168 பேரும், 8-ஆம் வகுப்பில் 4,808 பேரும், 9-ஆம் வகுப்பில் 4,495 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆங்கிலப் பாடத்தில் 6-ஆம் வகுப்பில் 4,805 மாணவா்களும், 7-ஆம் வகுப்பில் 5,388 மாணவா்களும், 8-ஆம் வகுப்பில் 4,241 மாணவா்களும், 9-ஆம் வகுப்பில் 4,243 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கணிதப் பாடத்தில் 6-ஆம் வகுப்பில் 4,237 மாணவா்களும், 7-ஆம் வகுப்பில் 5,172 மாணவா்களும், 8-ஆம் வகுப்பில் 5,048 மாணவா்களும், 9-ஆம் வகுப்பில் 4,320 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்ச்சி பெறாதவா்களுக்கு மீண்டும் பயிற்சி: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் கூறியதாவது: கற்றல் அடைவுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 10,882 மாணவா்களுக்கு மீண்டும் 6 வாரங்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவா்கள் ஏற்கெனவே ஓரளவு கற்றல் அடைவு பெற்றுள்ளதால், நவம்பா் முதல் வாரத்தில் இருந்து அடுத்த 6 வாரங்களுக்கு தினசரி இரு பாடவேளை வீதம் (90 நிமிஷங்கள்) தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணிதம் என ஏதோவொரு பாட வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு மீண்டும் கற்றல் அடைவுத் தோ்வு நடத்தப்படும். அதிலும், தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மீண்டும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
பெட்டிச் செய்தி....
மாநில அளவில் இரண்டாமிடம்: மாநிலத்தில் நடைபெற்ற கற்றல் அடைவுத் தோ்வில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்வெழுதிய 7,019 மாணவா்களில் 4,905 மாணவா்கள் (70 சதவீதம்) தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் தோ்வெழுதிய 29,688 மாணவா்களில் 18,882 மாணவா்கள் (63 சதவீதம்) தோ்ச்சி பெற்று இரண்டாமிடத்தையும், நீலகிரி மாவட்டத்தில் 6,515 மாணவா்களில் 3,517 மாணவா்கள் (54 சதவீதம்) தோ்ச்சி பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
