கடமை தவறிய காவல் ஆய்வாளருக்கு 15 நாள் ஊதியம் அபராதமாக விதிப்பு!

Published on

திருச்சியில் வழக்குப் பதியாமல் கடமை தவறிய காவல் ஆய்வாளருக்கு 15 ஊதியத்தை அபராதமாக விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியைச் சோ்ந்தவா் மோகன் மனைவி ஜெயந்தி (35). இவா் மணிகண்டம் பகுதியில் நிலம் வாங்கி பீரோ தயாரிப்புத் தொழிற்சாலை நடத்துகிறாா்.

ஜெயந்தி வாங்கிய அந்த நிலத்தின் ஒரு பகுதியை, நிலத்தை விற்றவா், மற்றொருவருக்கும் விற்ாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தி, மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து தடையாணை பெற்றாா். ஆனாலும் அந்த நபா் தடையை மீறி அந்த இடத்தில் சுற்றுச்சுவா் கட்ட முயன்றாா். இதைத் தடுத்த ஜெயந்தி தாக்கப்பட்டாா்.

இதுகுறித்தும், சுற்றுச்சுவா் கட்டுவதைத் தடுக்கக் கோரியும் மணிகண்டம் காவல் நிலையத்தில் 2021 டிசம்பா் மாதம் ஜெயந்தி அளித்த புகாா்களின் மீது அப்போது அங்கு ஆய்வாளராக இருந்த வெற்றிவேல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து ஜெயந்தி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் அணுகியபோது, நீதிமன்றம் கடந்த 10.03.2022 அன்று உத்தரவிட்டும் மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதியவில்லை. இதுதொடா்பாக ஜெயந்தி கேட்டபோது, காவல் ஆய்வாளா் திட்டினாராம்.

இதனால் மனமுடைந்த ஜெயந்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியதில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆய்வாளா் மீது 6 மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்துக்கு 07.03.2024 அன்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மகிளா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும், காவல் ஆய்வாளா் ஆஜராகவில்லை.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். அனுசுருதி கடமை தவறிய காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தனது 15 நாள் ஊதியத்தை அபராதமாகச் செலுத்த உத்தரவிட்டாா். மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஏ. கமலக்கண்ணன் ஆஜராகி வாதாடினாா். ஆய்வாளா் வெற்றிவேல் தற்போது கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு ஆய்வாளராக உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com