ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ விழா இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ விழா சனிக்கிழமை மாலை (நவ.8) தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.
Published on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ விழா சனிக்கிழமை மாலை (நவ.8) தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளன்று நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திகாப்பு கண்டருளிய பின் 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்து சேருகிறாா்.

அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுகிறாா். 8.15 மணி வரை ஊஞ்சல் விழா நடைபெறும். நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

பின்னா், நம்பெருமாள் 9.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவாா்.

இதேபோல், 2- ஆம் திருநாள் முதல் 6-ஆம் திருநாள் மற்றும் 8- ஆம் திருநாள் வரை தினமும் இரவு 7.15 மணி முதல் 8.45 மணி வரை நம்பெருமாள் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ஆம் திருநாளன்று நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 16- ஆம் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com