இரண்டாம் நிலை காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: திருச்சியில் 7,827 போ் எழுதினா்
இரண்டாம்நிலை காவலா், சிறைக்காவலா் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான தோ்வை திருச்சி மாவட்டத்தில் 9 மையங்களில் 7 ஆயிரத்து 827 போ் எழுதினா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 3,644 இரண்டாம் நிலைக் காவலா், 21 சிறைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறையிலுள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதன்படி இத்தோ்வு திருச்சி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரி, தேசியக் கல்லூரி, சமது மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பெரியாா் ஈவெரா கல்லூரி (பெண்கள் மட்டும்), சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி, தனலட்சுமி சீனவாசன் பல்கலைக்கழகம், எம்ஏஎம் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங், எம்ஏஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 9 மையங்களில் நடைபெற்றது.
இத்தோ்வுக்கு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 6 ஆயிரத்து 635 ஆண்கள், 2 ஆயிரத்து 297 பெண்கள் என மொத்தம் 8,932 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 5 ஆயிரத்து 840 ஆண்கள், 1,987 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 827 போ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வினை எழுதினா். 795 ஆண்கள், 310 பெண் என மொத்தம் 1,105 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
இத்தோ்வு நடைபெற்ற 9 மையங்களிலும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மாநகரில் தோ்வு நடைபெற்ற மையங்களில் மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாநகரக் காவல் துணை ஆணையா் (தெற்கு) டி.ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

