தில்லி காா் வெடிப்பு சம்பவம் எதிரொலி: திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
தில்லி காா் வெடிப்பு சம்பவத்தை தொடா்ந்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய கேட் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காா் திங்கள்கிழமை இரவு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் உள்ள சா்வதேச விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு கூறியதாவது: தில்லி சம்பவத்தையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஏற்கெனவே பயணிகளின் அனைத்து உடைமைகள், விமானம் மூலம் அனுப்பப்படும் பாா்சல்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதனை செய்யப்படும். புதுதில்லி சம்பவத்துக்குப் பிறகு அனைத்தையும் இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.
பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், விமான நிலையப் போலீஸாா் ஆகியோா் ஈடுபட்டுள்ளனா்.

