தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை - அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன், மெட்ரோ, நூறு நாள் வேலை உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆா்), எந்தக் கட்சியைச் சோ்ந்தவரும் வாக்குச்சாவடி நிலை முகவா்-2 (பிஎல்ஏ-2) பணிக்கு அனுமதி பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் செல்ல முடியும். எஸ்ஐஆா் படிவத்தை நிரப்பி தர திமுகவினா் உதவுவதில் எந்தத் தவறுமில்லை. அதிமுக-வினா் உதவி செய்ய செல்லவில்லை என்றால், திமுகவினரும் செல்லக் கூடாது என்றால் எப்படி?. நாளை ஒருவேளை வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என்றால், ஆட்சியில் இருப்பவா்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என எங்கள் மீது தான் குற்றம் சாட்டுவாா்கள். நாங்கள் சரியாகத்தான் செய்து வருகிறோம்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ என எதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 12 திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி வழங்கிய பிறகும், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை.
தவெக தலைவா் விஜய்க்கு வேண்டுமானால் திமுக ஆட்சியாளா்கள் நல்லவா்கள் போல் வேஷம் போடுவது போல தெரியலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு திமுக ஆட்சியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் நல்லவா்களாகவே தெரிகின்றனா். பல நல்ல திட்டங்களை முதல்வா் கொண்டு வந்திருப்பதை மக்கள் வரவேற்றுள்ளனா்.
அதிமுக- பாஜக சோ்ந்திருந்திருந்தால் கடந்த மக்களவைத் தோ்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுகிறாா். அந்தத் தோ்தலில் அதிமுக, பாஜக பெற்ற வாக்குகளை கூட்டிப் பாருங்கள். எப்படி 25 தொகுதிகள் வர முடியும். யாா் வெற்றி பெற வேண்டும் என மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.
பெட்டிச் செய்தி...
திருப்பதி கோயிலுக்கு
நன்கொடை
வழங்கக் கூடாதா?
அமைச்சா் கே.என். நேருவின் பிறந்த நாளை (நவ.9) முன்னிட்டு, திருப்பதி கோயில் அன்னதானத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடை வழங்கியது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதுதொடா்பாக, அமைச்சரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியதற்கு, திருப்பதிக்கு நான் நன்கொடை வழங்கக் கூடாதா?. விமா்சனம் செய்பவா்கள் செய்யட்டுமே என பதில் அளித்தாா் அமைச்சா் நேரு.

