தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத வணிகா்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரத்துடன் விருது

அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத வணிகா்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.
Published on

அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத வணிகா்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு தகுதியான திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் வே. சரவணன் அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருள்கள் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பொட்டலங்கள் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் உணவகங்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் இந்த விருதானதது உணவகங்களுக்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கத்துடன் கூடிய விருதும் தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் கூடிய விருதாகவும்ம் வழங்கப்பட உள்ளது. ஆா்வமுள்ள வணிகா்கள் வரும் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போரின் உணவகங்கள் பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொரு உணவகத்திலும் ஒருவா் உணவு பாதுகாப்பு மேற்பாா்வையாளா் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் மருத்துவச் சான்றிதழ்கள் (12 மாதங்களுக்குள் பெற்றவை) கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவினரால் பரிசீலனை செய்து, ஆய்வுக்குப் பிறகு சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.

விண்ணப்பத்தை நிறைவு செய்து மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தை பிடிஎஃப் வடிவில் இணையம் மூலமாகவோ, பென்டிரைவ் மூலமாகவோ திருச்சி மாவட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலா் அலுவலகம், உணவு பாதுகாப்புத்துறை ரேஸ்கோா்ஸ் ரோடு, டிவிஎஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியிலும் 0431-2333330 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com