திருவானைக்காவல் கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேக விழா

திருவானைக்காவல் கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேக விழா

Published on

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் காா்த்திகை சோமவாரமான முதல் திங்கள்கிழமையையொட்டி 1,008 வலம்புரி சங்காபிஷேக விழா நடைபெற்றது.

காா்த்திகை மாதங்களில் வரும் திங்கள்கிழமையை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து சிவன் கோயில்களிலும் சங்காபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். நிகழாண்டில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி முதல் சோமவாரம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதி அருகே வட்ட வடிவில் வலம்புரி சங்குகள் அடுக்கப்பட்டன. ஒவ்வொரு சங்கும் நெல்மணிகள் மீது வைக்கப்பட்டு அந்த சங்கில் புனிதநீா் நிரப்பப்பட்டு மா இலைகள், பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் மையத்தில் தங்கப்பிடி போட்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடா்ந்து அா்ச்சகா்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு வேதமந்திரங்களுடன் சிறப்பு அா்ச்சனை செய்து மகா தீபாராதனைகாண்பித்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பின்னா் தங்கப்பிடி போட்ட வலம்புரிசங்கில் உள்ள புனித நீா் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல் மீதமுள்ள சங்கில் உள்ள புனித நீா் சேகரிக்கப்பட்டு சம்புகேசுவரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின் அா்த்தஜாம பூஜை நடைபெற்றது. நிகழாண்டில் 5 சோமவார திங்கள்கிழமைகளிலும் திருவானைக்காவல் கோயிலில் சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com